ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய நிர்வாகப் பணிகளை கனவாகக் கொண்டு யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு, வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணம் பெரும் ஊக்கமாக அமைகிறது. அந்த வகையில், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை முழுவதும் தமிழ் மொழியில் எழுதி, தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தவர் வி.ப.ஜெயசீலன் ஐஏஎஸ்.
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன், தமிழ் வழி கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். பெற்றோரின் உறுதியான ஆதரவுடன், மதுரையில் உள்ள வேளாண் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 10-ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை மனதில் விதைத்துக் கொண்டார்.
2010-ம் ஆண்டு முதல் யுபிஎஸ்சி தேர்விற்கு தீவிரமாக தயாராக தொடங்கிய ஜெயசீலன், இடையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும் வெற்றி பெற்றார். 2012-ம் ஆண்டு யுபிஎஸ்சியில் தகுதி பெற்றாலும், அப்போது அவருக்கு இந்திய வருவாய் பணியில் (IRS) பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், ஐஏஎஸ் கனவை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தார்.
தமிழ் வழியில் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவது மிகவும் கடினமான ஒன்றாக கருதப்படும் நிலையில், தமிழ் மொழி மீது கொண்ட நம்பிக்கையால், ஜெயசீலன் முழு தேர்வையும் தமிழிலேயே எழுதியுள்ளார். தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், மொழியை தனது பலமாக மாற்றினார்.

